போர் நிறுத்தம் காரணமாக இஸ்ரேல், எகிப்தின் உயரிய விருதுகளைப் பெறுகிறார் டொனால்டு ட்ரம்ப்
காசா பகுதியில் போரை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளைப் பெற உள்ளார்.
காசாவில் பிணைக்கைதிகள் விடுவிப்பதிலும், போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் ட்ரம்ப் எடுத்த முயற்சிகளை பாராட்டி, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், அவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் விருதான இஸ்ரேலிய அதிபர் பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
“தன் அயராத முயற்சிகளின் மூலம் ட்ரம்ப், எங்கள் அன்புக்குரியவர்களை வீட்டுக்கு அழைத்து வர உதவியதோடு மட்டுமல்லாது, மத்திய கிழக்கில் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் நிலையான அமைதிக்கான புதிய காலத்துக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளார். அவரை இந்த விருதால் கௌரவிப்பது பெருமையாகும்,”
என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலும், ட்ரம்ப் காசா போரை நிறுத்துவதில் ஆற்றிய பங்களிப்பை மதித்து, அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில்,
“காசா பகுதியில் சமாதான முயற்சிகளை ஊக்குவித்ததும், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்ததும்காக ட்ரம்பின் பங்களிப்பு வரலாற்று சிறப்புமிக்கது,”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.