புதிய வேகத்தில் இந்தியா : அடுத்த இலக்கை நோக்கி முன்னேற்றம்
ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்துள்ள நிலையில், 2030க்குள் ஜெர்மனியையும் முந்தும் திறன் நாட்டுக்கு இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை விரிவாக பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. சீனா இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த சூழலில், வேகமான வளர்ச்சியின் மூலம் இந்தியா உலகின் நான்காவது பொருளாதார நாடாக உயர்ந்து, ஜப்பானை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கிடையிலும், 2025–26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி வேகம் தொடருமானால், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியையும் இந்தியா முந்தும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெர்மனியை முந்துவதற்கு இந்தியா எவ்வகையான பாதையை பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதற்கு முன், ஜப்பானை இந்தியா முந்தியதற்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, உள்நாட்டு தேவையின் பலவீனம், நீண்டகால பணவாட்ட அழுத்தங்கள் ஆகியவை ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்தின.
இதற்கு மாறாக, இளமையான மக்கள்தொகை, விரிவடைந்து வரும் உள்ளூர் சந்தைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தன. அதிகரிக்கும் நகரமயமாக்கல், உற்பத்தித் திறன் மேம்பாடு, பெரும் இளைஞர் தொழிலாளர் படை ஆகியவை இந்திய பொருளாதாரத்திற்கு வலுவான தள்ளுபடியாக செயல்பட்டன.
இதன் விளைவாக, 2025–26 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரை காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த பல காலாண்டுகளில் இல்லாத சாதனையாகும்.
உலகளாவிய வர்த்தகச் சூழலில் தொடரும் சிக்கல்களும், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பாதிக்க முடியாமல் போனது. வேலைவாய்ப்புகள் அதிகரித்தது, பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தது, வலுவான நிதி அமைப்பு மற்றும் வணிகங்களுக்கு தடையில்லா கடன் வசதி ஆகியவை பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தின.
இந்திய பொருளாதாரத்துக்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள், உயர்ந்த வளர்ச்சியையும் குறைந்த பணவீக்கத்தையும் தெளிவாக காட்டுகின்றன. இதனால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி 2025–26 நிதியாண்டிற்கான வளர்ச்சி மதிப்பீட்டை 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டோரின் வேலையின்மை விகிதம் 2025 நவம்பரில் 4.8 சதவீதமாக குறைந்துள்ளது.
இப்போது இந்தியாவின் கவனம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை நோக்கி திரும்பியுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.01 டிரில்லியன் டாலராகவும், 2026ஆம் ஆண்டில் 5.33 டிரில்லியன் டாலராகவும் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, இந்தியா 2030ஆம் ஆண்டில் சுமார் 7.3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வளர்ச்சி நிலை தொடருமானால், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளுக்குள் ஜெர்மனியை இந்தியா முந்தும் வாய்ப்பு உள்ளது என மதிப்பிடப்படுகிறது.
ஜப்பானைப் போல அல்லாமல், ஜெர்மனி வலுவான ஏற்றுமதி அடித்தளத்துடன், உயர்ந்த வருமானம் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய பொருளாதாரமாக திகழ்கிறது. இருப்பினும், உலக வர்த்தக மந்தநிலை, எரிசக்தி மாற்றத்திற்கான செலவுகள், முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற சவால்கள் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வருகின்றன.
ஜெர்மனியை முந்துவதற்கு, இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகள் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை பேண வேண்டும். உள்நாட்டு தேவையின் நிலைத்த வலிமை, வருமான உயர்வு, நகர்ப்புற நுகர்வு விரிவடைதல், கிராமப்புற வாங்கும் திறன் மேம்பாடு ஆகியவை வளர்ச்சியின் அடித்தளமாக இருக்க வேண்டும்.
அதோடு, குறைந்த பணவீக்கம், நிதி ஒழுங்கு, நிலையான கொள்கை சூழல் ஆகியவை இந்தியாவை தடையின்றி வேகமாக முன்னேறச் செய்யும்.
வளர்ச்சியும் விலை நிலைத்தன்மையும் இணைந்த இந்த “சரியான சமநிலை” தொடருமானால், ஜெர்மனியை முந்துவதோடு மட்டுமல்லாமல், உலகின் முன்னணி மூன்று பொருளாதார சக்திகளில் இந்தியா தனது இடத்தை உறுதிப்படுத்தும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.