ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் – பிசிசிஐ கடிதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியனாக வெற்றி பெற்ற நிலையில், அந்த கோப்பையை இந்திய அணிக்கே ஒப்படைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ACC) அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் கைப்பற்றியது. ஆனால், கோப்பையை வழங்குவதற்காக வந்த பாகிஸ்தான் அமைச்சர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இதையடுத்து, நக்வி அந்த கோப்பையை வழங்காமல் எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையாகியது.
இந்தச் சூழலில், பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி, “இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கோப்பையை உடனடியாக இந்திய அணிக்கே ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இதை உறுதிப்படுத்தி,
“எங்கள் கோரிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இணங்க மறுத்தால், இந்த விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) முன் எடுத்துச் செல்வோம்,”
என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நவம்பர் 4 முதல் 7 வரை நடைபெறும் ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.