உலகில் முதல்முறையாக முழு அஞ்சல் சேவையை நிறுத்திய நாடு – டென்மார்க்
உலக நாடுகளில் முதன்முறையாக அஞ்சல் சேவையை முழுமையாக நிறுத்திய நாடாக டென்மார்க் உருவெடுத்துள்ளது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள டென்மார்க்கில், 1624 ஆம் ஆண்டிலிருந்து கடித சேவை நடைமுறையில் இருந்து வந்தது. இருப்பினும், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் கடிதப் பயன்பாடு கணிசமாக குறைந்ததைத் தொடர்ந்து, இந்த சேவையை நிறுத்த அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
அரசு வெளியிட்ட தகவலின்படி, 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்மார்க்கில் கடித அனுப்பும் பழக்கம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, 401 ஆண்டுகள் பழமையான அஞ்சல் சேவை அந்நாட்டின் போஸ்ட்நோர்ட் (PostNord) நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,500 சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றில் பல ஏலத்தில் விற்கப்பட்டு, கிடைக்கும் வருவாய் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடித விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பார்சல் மற்றும் சரக்கு விநியோக சேவைகளில் மட்டும் கவனம் செலுத்த போஸ்ட்நோர்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.