நைஜீரியாவில் நடந்த சாலை விபத்து – பிரிட்டன் குத்துச்சண்டை நட்சத்திரம் ஆண்டனி ஜோஷ்வா காயம்!
நைஜீரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஆண்டனி ஜோஷ்வா சிக்கி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தாலும், நைஜீரிய–பிரிட்டன் மரபைச் சேர்ந்தவர் ஆண்டனி ஜோஷ்வா.
அவர் நைஜீரியாவில் நண்பர்களுடன் சொகுசு காரில் பயணம் மேற்கொண்டிருந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோர விபத்தில் ஜோஷ்வா மற்றும் வாகனத்தை ஓட்டிய நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவருடன் பயணித்திருந்த இரண்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் குத்துச்சண்டை களத்தில் திரும்பிய ஆண்டனி ஜோஷ்வா, சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் ஜேக் பால் என்பவரை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தார்.
மேலும், வரும் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியமான குத்துச்சண்டை போட்டியில் டைசன் ஃபியூரியுடன் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.