செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வலுப்படுத்தும் நடவடிக்கை : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா போர் பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு செய்தி
ஜம்மு–காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு தன்னம்பிக்கையும் மன உறுதியும் வழங்கும் நோக்கில், இந்திய இராணுவம் கொரில்லா போர் முறையை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் அளித்து வரும் இந்தப் பயிற்சிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்…
ஜம்மு–காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பல கிராமங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளின் அருகே உள்ளதால், அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் ரோந்து நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தோடா மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு இந்திய ராணுவம் கொரில்லா போர் முறையிலான அடிப்படை பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
தோடா–சாம்பா எல்லைப் பகுதிகளில் உள்ள 17 தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், பெண் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்துதல், அடிப்படை போர் நுட்பங்கள், தற்காப்பு முறைகள், பதுங்குக் குழிகள் அமைத்தல், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி, தோடா மாவட்டத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிங்கினி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தங்கள் சொந்த கிராமங்களைத் தாங்களே பாதுகாக்கும் திறனை வளர்த்தெடுப்பதும், அவசர நிலைகளில் முதன்மையாக களத்தில் நிற்கும் துணிச்சலை உருவாக்குவதுமே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில், செனாப் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்தப் பயிற்சி கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு–காஷ்மீர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட பயிற்சி, கிராம பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயுத பயிற்சி பெறும் பொதுமக்கள், இந்தப் பயிற்சி தங்களுக்கு ஊக்கமும் பாதுகாப்பு உணர்வும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர். 1990-களில் அடிக்கடி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூர்ந்த கிராம மக்கள், கூடுதல் தானியங்கி ஆயுதங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கிராம பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு கௌரவ ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கிராமங்களில் பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டதால், மக்களிடையே நிலவிய பயம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் ஆதரவை பயங்கரவாத குழுக்களுக்கு கிடைக்காமல் தடுப்பதும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதுமே இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காகும். இத்தகைய பயிற்சிகள் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்பு வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.