உலகில் முதன்முறையாக கிரிபாட்டி தீவில் பிறந்த ஆங்கில புத்தாண்டு!
உலகில் முதன்மையாக கிரிபாட்டி தீவில் ஆங்கில புத்தாண்டு உதயமானது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது.
சூரியன் முதலில் உதயமாகும் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவுகளில், ஆங்கில புத்தாண்டு உலகிலேயே முதல் முறையாக பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் அங்கு நடத்தப்பட்ட பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்து நகரின் மையப் பகுதியில் புத்தாண்டு கவுண்ட்டவுன் நிறைவடைந்தவுடன், ஸ்கை டவரிலிருந்து வெடித்த வண்ணமயமான வாணவேடிக்கைகள் வானை ஒளிரச் செய்தன. உற்சாகத்தில் திளைத்த மக்கள் ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
அதேபோல், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. சிட்னி ஹார்பர் பாலத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகள், இரவை பகல் போல மாற்றியமைத்தன.
இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.