YouTube-ஐ முந்தும் வகையில் X தளத்தில் அதிக வருமானம் – பரிசீலனையில் எலான் மஸ்க்
உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு (Content Creators) யூடியூபை விட அதிக வருமானம் வழங்குவது குறித்து X நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ஆலோசனை செய்து வருகிறார். இது படைப்பாளர்களுக்கு புத்தாண்டு பரிசாகவே பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
X சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு தற்போது அதிக கவனம் பெற்றுத் டிரெண்டாகி வருகிறது.
Content Creators யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருமானம் ஈட்டிவருகின்றனர். ஆனால் யூடியூபுடன் ஒப்பிடும்போது, X தளத்தில் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பல படைப்பாளர்கள் அதிக ஊதியம் வழங்கும் பிற தளங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, Content Creators-ஐ தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் X தளத்தின் நிறுவனர் எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படைப்பாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஊதியம் குறைவாக இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், யூடியூபுடன் நேரடியாக போட்டியிடும் வகையில் வருமானத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
படைப்பாளர்களுக்கு கூடுதல் வருமானம் வழங்க வேண்டும் என X தளத்தின் தயாரிப்பு பிரிவு தலைவர் நிகிதா பியர் (Nikita Bier) பதிவிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்தபோது, மஸ்க் இதனை உறுதிப்படுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், உண்மையான மனிதர்களால் உருவாக்கப்பட்ட நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ உள்ளடக்கங்களை பாதுகாக்க டிஜிட்டல் தளங்கள் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், அசல் படைப்பாளர்களுக்கு அதிக வருமானம் வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எலான் மஸ்கின் கருத்து அமைந்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். X தளம் இதுவரை YouTube AdSense-க்கு ஈடாக செயல்படவில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தணிக்கை குறைவாக இருப்பதால் வீடியோக்களை பகிரவும் பார்வையிடவும் X தளம் சிறந்த தளமாக உள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
படைப்பாளர்களுக்கு உரிய வருமானம் வழங்கும் தளங்களே எதிர்காலத்தில் நம்பகமான உள்ளடக்கங்களுடன் நிலைத்திருக்கும் என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் X தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பின்னர், ‘Creator Monetisation Programme’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் தங்களின் பார்வையாளர் எண்ணிக்கை அடிப்படையில் விளம்பர வருவாயில் ஒரு பங்கைப் பெற முடிந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க் தற்போது வெளியிட்டுள்ள கருத்து, Content Creators எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் உண்மையில் எவ்வளவு பயனளிக்கும் என்பது வருங்காலத்தில் தெரியவரும்.