ஆங்கில புத்தாண்டு – உலக நாடுகளில் உற்சாக விழா!
புதிய ஆண்டின் வருகையைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா, கண்கவர் வண்ண ஒளிப்படலங்களால் ஒளிர்ந்து பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. இந்த காட்சிகளை ஆயிரக்கணக்கானோர் நேரில் கண்டுகளித்தனர். இதனுடன் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன.
சிங்கப்பூரில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒன்றிணைந்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து வெடித்த வாணவேடிக்கைகள் வானத்தை வண்ணமயமாக மாற்றின.
ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் புத்தாண்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, சிட்னி ஹார்பர் பாலத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை கண்களை கவரும் வகையில் அமைந்தது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில், ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு மகிழ்ச்சியுடன் புத்தாண்டு விழாவில் பங்கேற்றனர். அப்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஈஃபில் கோபுரத்திலிருந்து வாணவேடிக்கைகள் வானில் பறந்தன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதி, திருவிழா சூழலுடன் ஒளிர்ந்தது. அங்கு நடைபெற்ற வாணவேடிக்கைகள் இரவைக் கூட பகல்போல் பிரகாசிக்கச் செய்தன.