எலி வலை போல் பின்னிப்பிணைந்த ரகசிய பாதுகாப்பு வலையுடன் ரஷ்ய அதிபரின் இல்லம்!
உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்களின் இலக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லம் மாறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சூழலில், புதின் தற்போது தங்கியிருக்கும் இல்லம் தொடர்பான பரபரப்பூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றை இப்போது விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் தருணத்தில், ரஷ்ய அதிபரின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு ரஷ்யாவில் உள்ள நோவ்கோரோட் மாகாணத்தில், புதின் தங்கும் வால்டாய் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் முயற்சி செய்ததாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டினார்.
தாக்குதல் வெற்றியடையுவதற்கு முன்பே, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ட்ரோன்களை கண்டறிந்து அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இது ஆதாரமற்ற குற்றம் என்றும், அரசியல் நோக்கத்துடன் பழி சுமத்தும் செயல் என்றும் விமர்சித்தார். மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை திசைதிருப்ப ரஷ்யா மேற்கொள்ளும் நாடகமே இது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த ட்ரோன் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி முயற்சிகளில் தடையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்தாலும், அவரது பாதுகாப்பு அமைப்புகள் எவ்வளவு நுட்பமானவை என்பதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுள்ளது.
அதே நேரத்தில், புதினின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் சாதாரண குடியிருப்புகள் அல்ல என்பதும், அவை உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ராணுவக் கோட்டைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் அரண்மனை, மாஸ்கோ புறநகரில் அமைந்துள்ள நோவோ-ஒகாரியோவோ இல்லம், மேலும் சமீபத்தில் தாக்குதல் முயற்சிக்கு இலக்கான நோவ்கோரோட் மாகாணத்தின் வால்டாய் எஸ்டேட் ஆகியவை முக்கிய அதிகாரப்பூர்வ குடியிருப்புகளாகக் கருதப்படுகின்றன.
மத்திய மாஸ்கோவில் அமைந்துள்ள கிரெம்ளின் மாளிகை, ரஷ்ய அரசின் அதிகார மையமாக விளங்குகிறது. முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடைபெறும் இடமாக இருந்தாலும், புதின் இங்கு மிக அரிதாகவே தங்குவார் என்று கூறப்படுகிறது. மாஸ்கோ நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒடின்ட்சோவ்ஸ்கியில் அமைந்துள்ள நோவோ-ஒகாரியோவோ, ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ புறநகர் இல்லமாகும். அன்றாட நிர்வாக பணிகளுக்கான முதன்மை மையமாக இது செயல்படுகிறது.
நோவ்கோரோட் மாகாணத்தில் உள்ள வால்டாய் அரண்மனை, பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய அதிபர் இல்லங்களில் ஒன்றாகும். மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், செயற்கைக்கோள்களின் தொடர்ந்த கண்காணிப்பு ஆகியவை இந்த வளாகத்தை முழுமையாக பாதுகாத்து வருகின்றன. இதற்கு மேலாக, கருங்கடல் கரையோரம் கிராஸ்னோடர் மண்டலத்தில் உள்ள சோச்சி நகரின் போச்சரோவ் ருச்சே இல்லம், புதினின் கோடை கால குடியிருப்பாக அறியப்படுகிறது. இது ஓய்வுக்கும், ராஜதந்திர சந்திப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கருங்கடல் கரையில் அமைந்துள்ள கெலென்ட்ஜிக் அரண்மனை, “புதினின் அரண்மனை” என்றே பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் மருத்துவ மையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், நிலத்தடியில் ஆழமாக அமைந்த கட்டமைப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதினின் பாதுகாப்பிற்காக ரஷ்யா முழுவதும் ரகசிய பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், காடுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் அருகே சுரங்கப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
நோவோ-ஒகாரியோவோ, வால்டாய் மற்றும் போச்சரோவ் ருச்சே ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிபரின் உண்மையான இருப்பிடத்தை வெளியில் தெரியாமல் வைத்துக் கொண்டு, செயல்பாட்டு பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் நம்புகின்றனர்.