அமீரக ஆயுதக் கப்பல்களை குறிவைத்து சவூதி வான்தாக்குதல்!
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பியதாகக் கூறப்படும் ஆயுத சரக்குக் கப்பல்களை குறிவைத்து சவூதி அரேபியா வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணியில், ஏமனில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஏன் நேரடியாக மோதும் நிலைக்கு வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பை பார்ப்போம்.
ஏமன் நாடு பல ஆண்டுகளாகக் கடுமையான உள்நாட்டுப் போரின் பிடியில் சிக்கியுள்ளது. நாட்டின் வடக்கு பகுதிகள் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மறுபுறம், தெற்கு பகுதிகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசுக்கு துணையாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் ஏமனில் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாட்டின் தெற்குப் பகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் ஹவுதி போராளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஹவுதி அமைப்புக்கு ஈரான் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகமும் ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்கி வருவதாக சவூதி அரேபியா குற்றம் சாட்டுகிறது.
இந்த சூழலில், ஏமனின் முக்கல்லா துறைமுகத்தை நோக்கி ஹவுதி போராளிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சரக்குக் கப்பல்களை சவூதி அரேபியாவின் கூட்டணி விமானப்படை தாக்கியுள்ளது. அந்தக் கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டவை என்றும், அவை உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஆபத்தாகவும் இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏமன் அரசுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டு ஆதரித்து வருவதாகவும், நாட்டில் ராணுவ புரட்சி ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சவூதி அரேபியா கடுமையாக விமர்சித்துள்ளது. இதனிடையே, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அதிபர் ரஷாத் அல்-ஒலிமி, சவூதி அரேபியாவின் இந்த ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
தன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் தெளிவான “சிவப்பு கோடு” உள்ளது என்றும், அரசுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முறியடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு தயங்காது என்றும் சவூதி அரேபியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஆனால், அந்த சரக்குக் கப்பல்களில் ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கான எந்தவொரு ஆயுதங்களும் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் மறுத்துள்ளது. மேலும், இந்தக் கப்பல்கள் ஏமனுக்குச் செல்லும் விவகாரம் சவூதி அரேபியாவுக்கு முன்கூட்டியே தெரிந்ததே என்றும் அமீரகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, ஏமனில் உள்ள தங்களின் மீதமுள்ள ராணுவப் படைகளைத் தன்னிச்சையாக திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால், அந்தப் படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகம் ஆதரிக்கும் தெற்கு ஆயுதக் குழுக்கள், ஹட்ராமவுட் மாகாணத்தில் உள்ள ஏமனின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோமசிலா உள்ளிட்ட முக்கிய எண்ணெய் வளங்களையும், அரசு நிர்வாகத்தையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அதனைத் தொடர்ந்து, ஆளும் அதிபர் மன்றத்தின் தலைமையிடமாக செயல்படும் அதிபர் மாளிகையும் தெற்கு ஆயுதப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான மறைமுக முரண்பாடு தற்போது நேரடி மோதலாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு ஆசியாவில் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட்டு வந்த இந்த இரு நாடுகளும், தற்போது பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கப் போட்டியில் நேருக்கு நேர் நிற்கத் தொடங்கியுள்ளன.
“ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பதுபோல், சவூதி அரேபியா – ஐக்கிய அரபு அமீரக மோதல் தீவிரமடைந்தால், அதனால் அதிக பலன் பெறுவது ஹவுதி கிளர்ச்சியாளர்கள்தான் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.