விளம்பர அரசியல் மட்டும் : முடிவடையாத “போர் நிறுத்தம்”
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை தாமே முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில், அந்தப் போர்நிறுத்த முயற்சியில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி, தனது நெருங்கிய ஆலோசகரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரஞ்சித் ‘ரிக்கி’ சிங் கில் என்பவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார். இந்த ரஞ்சித் ரிக்கி கில் யார்? அவரது அரசியல் – நிர்வாக பின்னணி என்ன? என்பதையே இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. நான்கு நாட்கள் நீடித்த இந்த நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படையின் தாக்குதலால் பாகிஸ்தான் பெரும் இழப்புகளை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததால், இந்தியா தனது ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
ஆனால், இந்தப் போர்நிறுத்தத்திற்கு அமெரிக்காவே காரணம் என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதற்கு முற்றிலும் மாறாக, மூன்றாவது நாடோ அல்லது நபரோ எந்தவித மத்தியஸ்தமும் செய்யவில்லை என்பதை இந்திய அரசு பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான மூத்த இயக்குநராகவும், ட்ரம்பின் சிறப்பு ஆலோசகராகவும் செயல்பட்டு வரும் ரஞ்சித் ரிக்கி கில்-க்கு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விருது வழங்கி பாராட்டியுள்ளார். ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் முக்கிய ஆலோசனைப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மூன்று இந்திய-அமெரிக்கர்களில் ரிக்கி கிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான ரஞ்சித் ரிக்கி கில், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பு பிரிவின் இயக்குநராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், அமெரிக்க தூதரகத்தை தெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றிய முக்கிய முடிவில் அவர் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசின் ராணுவ, பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கும் மிக சக்திவாய்ந்த அமைப்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது. ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சார்ந்த முக்கிய பொறுப்புகள் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டன.
நியூ ஜெர்சி மாநிலத்தின் லோடி நகரில், பஞ்சாபி சீக்கிய வம்சத்தைச் சேர்ந்த குடியேறிய மருத்துவர்களான ஜஸ்பீர் கில் – பரம் கில் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் ரஞ்சித் கில். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் பெர்க்லேயில் சட்டக் கல்வியும் முடித்துள்ளார். 17 வயதிலேயே, கலிபோர்னியா மாநில கல்வி வாரியத்தில் மாணவர் உறுப்பினராக ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகர் அவரால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அமெரிக்க குழுவுடன் இந்தியா வந்த கில், இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியது ட்ரம்ப் தான் என இந்திய அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், போர்நிறுத்தம் என்பது இரு நாடுகளின் நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளின் விளைவே, அமெரிக்க மத்தியஸ்தம் அல்ல என்று இந்தியா உறுதியாக தெரிவித்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டால் வெள்ளை மாளிகை அதிருப்தியடைந்துள்ளதாகவும், ட்ரம்புக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் கில் வெளிப்படையாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், போர்நிறுத்தத்துடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், “பேச்சுவார்த்தை நடத்தியதற்காக” கில்-க்கு விருது வழங்கப்பட்டிருப்பது, இந்திய அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்களிடையே குழப்பத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.
முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இந்த விருது வழங்கல் ட்ரம்பின் நற்பெயரையே பாதிக்கும் நடவடிக்கையாக இருக்குமோ என கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், புவிசார் அரசியல் ஆய்வாளர் என்.என். ஓஜா, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்த “மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை” என்ற கருத்தை மறுப்பதற்கான அமெரிக்க முயற்சிதானா இந்த விருது என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தின் மூலம், இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச அணுகுமுறை மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.