2025ல் உலகை அதிர வைத்த வெப்ப சாதனை : இனி வரும் காலம் இன்னும் பயங்கரம்!
2025ஆம் ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தொட்டது, உலகம் சந்தித்த மிக அபாயகரமான நிகழ்வுகளில் ஒன்றாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், எதிர்கால ஆண்டுகள் மனிதகுலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2015ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், பூமியின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சாத்தியமான அளவில் 1.5 டிகிரி செல்சியஸிற்குக் கீழ் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டத் தவறினால், இயற்கை பேரிடர்கள் அதிகரித்து, மனித உயிரிழப்புகள் பெருகும் என அப்போதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு 194 நாடுகள் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிகளை நடைமுறையில் கடைப்பிடித்த நாடுகள் மிகக் குறைவே. இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டு உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
இதனால், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டுப்பாட்டை இழந்த காட்டுத்தீ சம்பவங்கள் வெடித்தன. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான வறட்சி நிலவியது. அதே நேரத்தில் இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகள் பெரும் வெள்ளப் பேரிடர்களால் தத்தளித்தன.
மேலும், ஸ்வீடன், பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் பதிவானது. குறிப்பாக, துருக்கியில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியதால், மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுவே எல்லாம் அல்ல. World Weather Attribution என்ற அமைப்பின் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் மட்டும் மிக மோசமான 157 வானிலைச் சம்பவங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன. இந்த நிகழ்வுகளால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சில நாடுகளில் அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு சூழ்நிலை மோசமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த World Weather Attribution அமைப்பின் இணை நிறுவனர் ஃபிரிடெரிகே ஓட்டோ (Friederike Otto), கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை உடனடியாக குறைக்காவிட்டால், பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டில் ஏற்பட்ட வெப்பஅலைகளின் தாக்கம், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு முழுக் காரணமும் மனிதர்களின் பொறுப்பற்ற செயல்கள்தான் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருபுறம் சீனா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், மறுபுறம் நிலக்கரி சார்ந்த தொழில்களில் பெரும் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோல், அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகமும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி சார்ந்த பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறைகளும் இதே போக்கில்தான் உள்ளன.
உலக நாடுகளின் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள், பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன என்பதையே வெளிப்படுத்துவதாக காலநிலை ஆய்வாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், பூமி இன்னும் அதிக வெப்பத்தை சந்தித்து, மனிதகுலம் எதிர்பார்க்காத அளவிலான அழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.