நெதன்யாகுவிடம் ட்ரம்பின் ஆதங்கம்: “யாரும் என்னை பாராட்டவே இல்லையே!”
உலக அளவில் எட்டு பெரிய மோதல்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறியபோதும், அதற்கான உரிய பாராட்டோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு இதோ.
அதிகாரப்பூர்வ பயணமாக அமெரிக்காவிற்கு வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புளோரிடாவில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மார்-எ-லாகோ மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து இருதரப்பு ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த சந்திப்பின்போது, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டிலேயே எட்டு போர்களை தன்னால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக ட்ரம்ப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்த மோதல்களைத் தீர்த்து வைத்தபோதும், அதற்கான எந்தவொரு சர்வதேச பாராட்டும் தமக்கு வழங்கப்படவில்லை என அவர் வெளிப்படையாகக் கூறி தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டினார். நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் தூதுக்குழுவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பின் காணொளியில், ட்ரம்பின் இந்தக் கருத்துகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
அந்த உரையாடலில், இராஜதந்திர முறையில் பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்த தன்னை, நோபல் அமைதிப் பரிசு உள்ளிட்ட எந்த விருதும் கவனிக்கவில்லை என ட்ரம்ப் விரக்தியுடன் பேசியது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கிடையிலான மோதல் முடிவுக்கு வராவிட்டால், அந்த நாடுகள் மீது 200 சதவீத வரி விதிப்பதுடன் கடுமையான வர்த்தக தடைகள் விதிக்கப்படும் என தான் எச்சரித்ததாகவும், அதன் காரணமாகவே 35 ஆண்டுகளாக நீடித்த அந்தப் போர் உடனடியாக முடிந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆர்மேனியா–அஜர்பைஜான் பிரச்சினையை ட்ரம்ப் தீர்த்துவைத்ததை நம்ப முடியவில்லை என தன்னிடம் கூறியதாகவும், பத்து ஆண்டுகளாக முயற்சி செய்தும் முடியாததை ட்ரம்ப் ஒரே நாளில் செய்து முடித்ததாக புதின் பாராட்டியதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தெற்காசிய விவகாரங்களைப் பற்றி பேசிய ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக மீண்டும் வலியுறுத்தினார். கடந்த மே மாதம் 10ஆம் தேதி, நீண்ட நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக அவர் தனது TRUTH SOCIAL தளத்தில் பதிவு செய்திருந்தார்.
ஆனால், பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், இதில் எந்த மூன்றாவது நாடோ அல்லது நபரோ தலையீடு செய்யவில்லை என்றும் இந்திய மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.
மேலும், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்துமாறு எந்த வெளிநாட்டு தலைவரும் இந்தியாவை வற்புறுத்தவில்லை என்றும், போர்நிறுத்த முடிவுகள் முழுமையாக இந்தியாவின் சுய முடிவுகளே என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இத்தகைய சூழலில், இந்தியா–பாகிஸ்தான் மோதலை 70வது முறையாக தானே நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் கூறியிருப்பது பரிதாபத்தையும் நகைப்பையும் ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது