நேபாளத்தில் முன்னாள் ராப் இசைக்கலைஞர் பலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு
நேபாளத்தில் முன்னர் ராப் இசை பாடகராகப் புகழ்பெற்ற பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டில் சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் நடைமுறைகளை கண்டித்து, ஜென்–ஸி இளைஞர்கள் தலைமையில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்மீது அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் கலவரங்களால் நேபாள அரசு வீழ்ந்தது. அதன் பின்னர், நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காத்மாண்டு மாநகர மேயராக பணியாற்றி வரும் பலேந்திர ஷா, வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்வைக்கப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணியின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் வழங்கிய மணி சின்னம் கீழ் பலேந்திர ஷாவின் அணியினர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். முன்னதாக ராப் பாடகராக அறியப்பட்டவர் தற்போது அரசியலில் முக்கிய பாத்திரமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.