மேக்கப் கொண்டு மறைக்கப்பட்ட டிரம்பின் கையிலுள்ள காயம் – வைரலாகும் காட்சிகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கையில் காணப்பட்ட காயங்களை மேக்கப் மூலம் மறைத்ததாக கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக, அமைதி பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமைதி உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை புளோரிடாவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த சந்திப்பிற்குப் பிறகு, இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, டிரம்பின் கையில் இருந்த காயங்கள் மேக்கப்பால் மூடப்பட்டிருந்தது புகைப்படங்களின் மூலம் வெளிப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 79 வயதான அமெரிக்க அதிபர் உடல்நலப் பிரச்சினைகளை மறைக்க முயற்சிக்கிறார் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் முன்வைத்தனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை தரப்பு முற்றாக மறுத்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் கைகுலுக்கல்கள் காரணமாக ஏற்பட்ட திசு சேதமே அந்த தழும்புகளுக்கு காரணம் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், டிரம்பின் கையில் காணப்படும் காயங்கள் அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான சாட்சியாக இருக்கலாம் என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். மேலும், அவர் உண்மையில் எதை மறைக்க முயற்சிக்கிறார்? என்ற கேள்வியையும் சமூக ஊடகங்களில் எழுப்பி வருகின்றனர்.