‘புதுமை வழிநடத்தும் வளர்ச்சி’ – பொருளாதார நோபல் பரிசு 2025, மூவருக்கு அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர் (Joel Mokyr), பிலிப் அகியோன் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt) ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்படவுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பங்கு குறித்த இவர்களின் ஆய்வுக்காக இந்த பெருமை அளிக்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொருளாதாரத்துக்கான பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நோபல் பரிசு மூவரிடையே பகிரப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜோயல் மோகிர் பரிசின் ஒரு பாதியைப் பெறுகிறார்; பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் இணைந்து மற்றொரு பாதியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
தொழில்நுட்ப புதுமைகள் எவ்வாறு நீடித்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்குகின்றன என்பதை விளக்கும் தனது ஆராய்ச்சிக்காக ஜோயல் மோகிர் தேர்வாகியுள்ளார். அதேபோல், பழைய கொள்கைகளை மாற்றி புதிய பொருளாதார கொள்கைகள் வழியாக தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிகளை முன்வைத்ததற்காக அகியோன் மற்றும் ஹோவிட் பாராட்டப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் சிறப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நெதர்லாந்தில் பிறந்த ஜோயல் மோகிர் தற்போது அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பிலிப் அகியோன் பாரிஸில் உள்ள Collège de France-இல் பணியாற்றுகிறார். பீட்டர் ஹோவிட் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.