டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்வு – ஏடிஎம் பயன்பாட்டில் சரிவு
நாட்டில் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வருவதன் விளைவாக, ஏடிஎம் இயந்திரங்களின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், பொதுமக்கள் யுபிஐ உள்ளிட்ட மின்னணு பண பரிவர்த்தனை முறைகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியதால், ரொக்கப் பணம் செலவிடும் பழக்கம் குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மக்கள் வருகை குறைவாக உள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த சில வங்கிகள், தங்களின் ஏடிஎம் மையங்களை படிப்படியாக மூடி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புதிய வங்கி கிளைகள் தொடங்கப்படுவதில் வளர்ச்சி காணப்படுவதாகவும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை 2.80 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
தற்போது, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வங்கி கிளைகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.