வைகுண்ட ஏகாதசி: தமிழகம் முழுவதும் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு – பக்தர்கள் பெருமளவில் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள விஷ்ணு கோயில்களில் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய ஆசீர்வாதம் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், மூலவருக்கு சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் விசேஷ அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்பட்ட பரமபத வாசல் வழியாக பக்தோசித பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்வழங்கினார்.
அதேபோல், மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் அதிகாலை நேரத்தில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெங்கடாசலபதி, வாசல் வழியாக புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று “கோவிந்தா, கோவிந்தா” என பக்தி முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோயிலில், அதிகாலை 5.18 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ரங்கநாதர், வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், அதிகாலை 5 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள், பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் “ரங்கா, ரங்கா” என முழங்கியதால் கோயில் வளாகம் பக்தி கோஷங்களால் முழங்கியது.