உத்தரப்பிரதேசம்: தடுப்பூசி பெற மருத்துவமனைக்கு திரண்ட கிராமவாசிகள்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெறிநாய்க்கடி காரணமாக இறந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை உண்டதாக ஏற்பட்ட அச்சத்தில், கிராம மக்கள் பெருமளவில் சுகாதார மையத்தில் தடுப்பூசி கேட்டு திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதாவூன் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில், கிராம மக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்தில், எருமை பாலை பயன்படுத்தி செய்யப்பட்ட ரைத்தா வழங்கப்பட்டதாகவும், அதை பலர் உணவாக எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அந்த ரைத்தா தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாலை வழங்கிய எருமை, தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு டிசம்பர் 26ஆம் தேதி உயிரிழந்ததாக தகவல் பரவியது. இந்த செய்தி கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் அச்சமடைந்த கிராமவாசிகள், வெறிநாய்க்கடி தடுப்பூசி பெற வேண்டும் எனக் கோரி அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் திரண்டனர். திடீரென அதிகமான மக்கள் வந்ததால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், கிராம மக்களுக்கு தேவையான விளக்கங்களை அளித்து, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தினர்.
மேலும், கொதிக்க வைத்து பயன்படுத்தப்பட்ட பால் மூலம் நோய் பரவும் வாய்ப்பு இல்லை என சுகாதாரத் துறையினர் தெளிவுபடுத்தினர். இதுவரை அந்த கிராமத்தில் எந்தவித நோய் பாதிப்பும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.