ஸ்மார்ட் விவசாயத்தில் வெற்றி கண்ட சீன இளைஞர் – தன்னம்பிக்கையின் உயிர்ப்பான எடுத்துக்காட்டு
பக்கவாதம் காரணமாக படுக்கையிலேயே இருந்தபடியே, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட் பண்ணையை ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவாக்கி, அதை லாபகரமாக நடத்தி வரும் இளைஞர் ஒருவரின் ஊக்கமளிக்கும் கதை இது. அந்த நபர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர், எந்த முறையில் ஸ்மார்ட் விவசாயத்தை நிர்வகிக்கிறார் என்பதைக் காணலாம்.
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரைச் சேர்ந்த 36 வயதான லீ சியா (Li Xia) என்பவரே அந்த நபர். ஐந்து வயதிலேயே அவருக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோயால், தொடர்ந்து பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார். ஆனால், முறையான கல்வியைத் தொடர முடியாவிட்டாலும், அறிவைப் பெறும் முயற்சியை அவர் ஒருபோதும் கைவிடவில்லை.
இயல்பாகவே இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் மீது அதிக ஆர்வம் கொண்ட லீ சியா, தன்னிச்சையாகவே கற்றலைத் தொடங்கினார். தனது தங்கையின் பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை ஒவ்வொன்றாக கவனமாக வாசித்து, மீண்டும் மீண்டும் பயின்று புரிந்துகொண்டார். ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய கணினி பாடநூல்கள் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து, அவற்றை முழுமையாகக் கற்றுக்கொண்டார்.
25 வயதில், இணையவழி பயிற்சிகளின் மூலம் கணினி நிரலாக்கம் (coding) எழுதுவதில் தேர்ச்சி பெற்றார். இதே நேரத்தில் அவரது உடல்நிலை நாளடைவில் மேலும் மோசமடைந்தது. நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. உணவு எடுத்துக்கொள்வதும் கடினமாகி, சுவாசிக்கும் திறனையும் இழந்தார். உடலில் ஒரே ஒரு கை விரலும், ஒரு கால் விரலும் மட்டுமே அசையக்கூடிய நிலை ஏற்பட்டது.
2020ஆம் ஆண்டில் லீ கோமா நிலையில் சென்றதைத் தொடர்ந்து, அவருக்கு சுவாசக் குழாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்தனர். ஆனால், லீ சியா மனம் தளரவில்லை.
2021ஆம் ஆண்டில், மண்ணில்லா நவீன விவசாய முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்மார்ட் விவசாயக் கருத்தை அவர் உருவாக்கினார். தனது நிரலாக்க அறிவையும், Internet of Things (IoT) தொழில்நுட்பத்தையும் இணைத்து, முழுமையான ஸ்மார்ட் பண்ணை கட்டுப்பாட்டு அமைப்பை வடிவமைத்தார். சுவாசக் கருவியுடன் இருந்தபடியே, virtual keyboard மூலம் வன்பொருட்கள் மற்றும் சென்சார்கள் செயல்படுவதற்கான விரிவான கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கினார்.
இதற்கிடையில், 2017ஆம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது தாய் வூ டிமெய் (Wu Dimei), லீ சியாவை முழுமையாக பராமரித்து வந்தார். மகனின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பத் திறன்களை புதிதாகக் கற்றுக்கொண்ட அவர், கட்டுப்பாட்டு பலகைகளை சாலிடரிங் செய்வது, நெட்வொர்க் வயரிங், மின்சுற்றுகள் அமைத்தல், பண்ணை உபகரணங்களை பராமரித்தல் போன்ற பணிகளை திறம்பட மேற்கொண்டார்.
இந்த ஸ்மார்ட் பண்ணையில் செர்ரி தக்காளி, கீரை வகைகள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன. மேலும், பண்ணை உற்பத்திகளை விநியோகிக்க பயன்படும் ரிமோட் மூலம் இயங்கும் ஓட்டுநர் இல்லாத வாகனத்தையும் லீயின் தாய் உருவாக்கியுள்ளார். இவ்வாறு உருவான ஸ்மார்ட் பண்ணை, இன்று வெற்றிகரமாக செயல்பட்டு நல்ல வருமானத்தையும் ஈட்டிக் கொண்டிருக்கிறது.
பொறுமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம், விடாமுயற்சி மற்றும் குடும்பத்தின் ஆதரவு இருந்தால் எந்தச் சவாலையும் வெல்ல முடியும் என்பதற்கு லீ சியா வாழும் சான்றாக உள்ளார். வென்டிலேட்டரை சார்ந்த நிலையில் இருந்தபோதும் அவர் காட்டிய உறுதியே அவரை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இன்று அவர் சீன இளைஞர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.