2026 எப்படியிருக்கும்? : அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்காவின் முன்கணிப்புகள்!
2026ஆம் ஆண்டு உலகத்திற்கு எவ்வாறு அமையும் என்பது குறித்து மறைந்த முன்னறிவிப்பாளர் பாபா வங்கா கூறியதாகக் கருதப்படும் பல கணிப்புகள் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அவற்றை மையமாகக் கொண்ட ஒரு விரிவான செய்தி தொகுப்பிது.
ஒவ்வொரு புத்தாண்டும் தொடங்கும் வேளையில், சில பிரபல பெயர்கள் மீண்டும் மீண்டும் பேசப்படுவது வழக்கம். அந்த பட்டியலில் தவறாமல் இடம்பெறும் பெயர் பாபா வங்கா. வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளவில் நிகழக்கூடிய மாற்றங்கள், அரசியல் திருப்பங்கள், இயற்கை பேரிடர்கள் உள்ளிட்டவை குறித்து அவர் முன்கூட்டியே தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள், ஆண்டின் முடிவில் விவாதப் பொருளாக மாறுகின்றன.
அதேபோல், 2026ஆம் ஆண்டைச் சார்ந்த அவரது முன்னறிவிப்புகள் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. பாபா வங்கா யார் என்பதை அறியாதவர்களுக்காக ஒரு சுருக்கமான பின்னணி – 1911ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்தவர் பாபா வங்கா. சிறுவயதில் பார்வை இழந்த இவர், அதனைத் தொடர்ந்து தனது உள்ளுணர்வு திறன் மூலம் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடைபெற்ற தாக்குதல், பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது போன்ற முக்கிய நிகழ்வுகளை இவர் முன்பே கணித்ததாக பலர் நம்புகின்றனர். அதேபோல், சமீப காலங்களில் ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், உலகின் பல பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றையும் அவர் முன்னரே கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் பின்னணியில், 2026ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகள் தற்போது மீண்டும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதன்படி, 2026ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் ஆட்சி வீழ்ச்சி தொடங்கும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இருபதாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் அதிகார மையமாக இருந்த புதின், பல உலக அரசியல் மாற்றங்களுக்கிடையிலும் பதவியில் தொடர்ந்துள்ளார்.
ஆனால், வரவிருக்கும் ஆண்டில் ரஷ்யாவில் புதிய தலைமை உருவாகும் என பாபா வங்கா கூறியதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் புதினின் ஆட்சி முடிவுக்கு வரும் வாய்ப்பு இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், 2026ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கிடையே கடுமையான மோதல்கள் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனா தைவானை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்றும், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் உச்ச கட்டத்தை எட்டும் என்றும் கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, உலகளாவிய அளவில் பெரும் போர் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும், அது மூன்றாம் உலகப்போருக்குத் துவக்கமாக இருக்கலாம் எனவும் சிலர் விளக்குகின்றனர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் வேகமாக அதிகரிக்கும் என்றும், அதன் தாக்கம் மனித வாழ்க்கையின் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்றும் பாபா வங்கா கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு விண்கலம் பூமியின் வளிமண்டலத்தை அடையும் என்றும், அதன் மூலம் வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்வு நடைபெறும் என்றும் அவரது ஆருடங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இயற்கை சீற்றங்களால் பூமியின் சுமார் 8 சதவீத பகுதி பாதிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பொருளாதார ரீதியிலும் அடுத்தாண்டு சவால்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பங்குச் சந்தைகளில் கடும் சரிவு, நாணய மதிப்பில் வீழ்ச்சி போன்றவை ஏற்படலாம் என்றும், அதன் விளைவாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும் என்றும் பாபா வங்காவின் கணிப்புகள் கூறுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
மொத்தமாகப் பார்க்கும்போது, 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகளில் பெரும்பாலானவை அச்சம் தருவதாகவே உள்ளன. ஆனால், இவை அனைத்தும் நிகழும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இதற்கு மாறாக, போர்களற்ற, பேரிடர்கள் குறைந்த, பொருளாதார ரீதியாக நிலையான ஆண்டாகவும் 2026 அமையக்கூடும். உண்மையில் என்ன நடைபெறும் என்பதை காலமே பதிலளிக்கும்.