ஒரு நாளில் 25 மணிநேரமா? – விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு தகவல்
சமீப காலமாக பூமியின் சுழற்சி வேகம் மெல்ல மெல்ல தளர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு நாளின் கால அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், தினசரி செய்ய வேண்டிய பணிகள் அளவுக்கு மீறி அதிகரித்து விட்டன. அதனால், 24 மணிநேரம் கொண்ட ஒரு நாள் போதவில்லை என்ற எண்ணம் பலருக்கும் தோன்றியிருக்கும். “குறைந்தது இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்” என பலரும் மனதில் நினைத்திருக்கலாம். அத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு விஞ்ஞானிகள் தற்போது ஒரு வியப்பூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது தற்போது இருப்பதை விட நீளமாக இருக்கும் என்றும், 24 மணிநேரம் கொண்ட நாள், 25 மணிநேரமாக மாறும் சாத்தியம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணங்களை அறிய முன்னர், “ஒரு நாள்” என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, பூமி தன்னைத்தானே ஒருமுறை சுழன்று முடிக்க எடுக்கும் காலமே 24 மணிநேரம் என்றும், அதுவே ஒரு நாள் என்றும் நாம் எளிமையாக புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இது முழுமையான அறிவியல் விளக்கம் அல்ல.
வானியல் ரீதியாக பார்க்கும்போது, பூமி 360 டிகிரி முழுவதுமாக சுழன்று மீண்டும் அதே விண்மீன் நிலைக்கு வர சுமார் 23 மணிநேரம் 56 நிமிடங்கள் மற்றும் 4 விநாடிகள் ஆகிறது. இதனை விஞ்ஞானிகள் “நட்சத்திர நாள்” (Sidereal Day) என அழைக்கின்றனர். இதுவும் ஒரு நாளை கணக்கிடும் ஒரு முறை ஆகும்.
மற்றொரு முறையாக, சூரியனை அடிப்படையாகக் கொண்டு நாளின் நீளம் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் மதிய நேரத்திலிருந்து அடுத்த நாளின் மதியம் வரை உள்ள காலமே “சூரிய நாள்” எனப்படுகிறது. இந்த சூரிய நாள் ஆண்டுதோறும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதாரணமாக, ஜூலை மாதத்தில் இது 23 மணிநேரம் 59 நிமிடங்களாகவும், டிசம்பர் மாதத்தில் 24 மணிநேரம் 30 விநாடிகளாகவும் மாறுபடும். இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கும் சூரிய நாள்களின் சராசரியே நாம் தற்போது பயன்படுத்தும் 24 மணிநேர நாள் ஆகும்.
இந்த சராசரி நாளின் நீளமே எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் சுழற்சி இயக்கத்தை லேசர் தொழில்நுட்பம், ரேடியோ அலைகள் போன்ற நவீன கருவிகளின் மூலம் ஆய்வு செய்ததில், பூமியின் சுழற்சி வேகம் மெதுவாகக் குறைந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக நிலவின் ஈர்ப்பு விசை குறிப்பிடப்படுகிறது. நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடல்களில் அலைகள் உருவாகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த அலைகள் கடல்தட்டில் ஏற்படுத்தும் உராய்வு, பூமியின் சுழற்சி வேகத்தை சற்று சற்று மந்தமாக்கி வருகிறது என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் சுழற்சி இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து நாசா விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வில், கடந்த நூற்றாண்டில் பனிப்பாறைகள் வேகமாக உருகியது, நிலத்தடி நீரின் அளவு குறைந்தது, கடல் மட்டம் உயர்ந்தது போன்ற இயற்கை மாற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து பூமியின் சுழல் அச்சு (Spin Axis) மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, பூமியின் சுழற்சி வேகம் குறைந்து, ஒரு நாளின் நீளம் 24 மணிநேரத்திலிருந்து 25 மணிநேரமாக மாறக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, “இந்த மாற்றம் எப்போது நிகழும்?” என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால், 2026 அல்லது அதற்கடுத்த சில ஆண்டுகளில் இந்த மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது 200 மில்லியன் ஆண்டுகள், அதாவது சுமார் 200 கோடி ஆண்டுகள் கழித்தே, ஒரு நாள் 25 மணிநேரமாக மாறும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதுவரை, நாம் பழகிய 24 மணிநேர நாளிலேயே நமது அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை தொடரும். கூடுதல் ஒரு மணி நேரத்திற்காக இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதுதான்.