தேசிய பாதுகாப்பை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாட கொள்முதல் – மத்திய அரசு முக்கிய முடிவு
புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு சுமார் 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த முக்கிய முடிவு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளான நிலைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகளின் செயல்திறனை உயர்த்தும் வகையில் பல்வேறு தளவாட கொள்முதல் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றன.
அதன்படி, பீரங்கி படைப்பிரிவுக்கான நவீன வெடிமருந்து அமைப்புகள், இலகுரக ரேடார் கருவிகள், பினாகா பல்குழாய் ராக்கெட் அமைப்புக்கான சிறப்பு வெடிமருந்துகள், மேலும் ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய தளங்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிதல் அமைப்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்காக, துறைமுகங்களில் பெரிய போர் கப்பல்களை இயக்க உதவும் பொல்லார்ட் புல் டக் வகை சிறப்பு படகுகளை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், வானிலிருந்து இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள், மேலும் தேஜாஸ் இலகு போர் விமானங்களுக்கு தேவையான முக்கிய தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன.
இந்த முடிவுகள் குறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புத் திறனை பலப்படுத்துவதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தளவாட கொள்முதல் நடவடிக்கைகள், இந்திய ராணுவத்தின் தயார்நிலையை உயர்த்துவதோடு, எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.