இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாகும் – விஞ்ஞானிகள் கணிப்பு
அமெரிக்கா: பூமி தன் சுற்றுப்பாதையை மெதுவாகச் சுழற்றி வருவதால், எதிர்காலத்தில் ஒரு நாள் நீளமும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
பூமி தன்னைச் சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வரும் முறையின் காரணமாக, நமக்கு இரவு-பகல் மாறுபடும். தற்போது பூமி ஒரு சுற்றுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது எனக் கணக்கிடப்படுகிறது. இதற்கேற்றவாறு நமது கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டு, அன்றாட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆனால், பூமியின் சுழற்சி மெதுவாக நடைபெறுவதால், ஒரு நாளில் சில மில்லி விநாடிகள் அதிகரித்து வருகிறது. இது சிறிய மாற்றமாகத் தோன்றினாலும், நீண்ட காலத்தில் நமது நேரக் கட்டுப்பாட்டில் விளைவுகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் ஏற்படும் ஓதங்கள், ஒரு இழுவை போன்ற செயல்பாடாக பூமியின் சுழற்சி ஆற்றலை குறைத்துவிடுகின்றன. இதனால், ஒரு நாளுக்கான நேரம் மெதுவாக நீளமாகி வருகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும், இதனால் பூமியின் இயற்கை நாளும் நம் நேரக் கணக்கும் வித்தியாசமாக இருக்கும்.