ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது!
சென்னையில் இன்று (அக்டோபர் 22) தங்கத்தின் விலை இரண்டு முறை குறைந்தது. காலை வேளையில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; மாலை வேளையில் மேலும் ரூ.1,280 குறைந்து, மொத்தத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.3,680 குறைந்துள்ளது.
அமெரிக்காவில் H1B விசா கட்டண உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு போன்ற காரணங்களால் சமீபத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. ஆனால் இன்று திடீரென விலை சரிந்தது முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
இன்று காலை தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.11,700 என்றும், பவுனுக்கு ரூ.93,600 என்றும் விற்பனையாகியது.
மாலை நேரத்தில் மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.11,540 ஆகவும், பவுனுக்கு ரூ.92,320 ஆகவும் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதனால், ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு மொத்தம் ரூ.3,680 குறைந்து விற்பனையாகி வருகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று மொத்தம் கிராமுக்கு ரூ.7 குறைந்து, தற்போது ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.