சபரிமலை தரிசனத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் சிக்கல்: பத்தனம்திட்டாவில் பரபரப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர், இன்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்கிரீட் தளத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
நான்கு நாள் கேரள பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று திருவனந்தபுரம் வந்திருந்த குடியரசுத் தலைவர், இன்று காலை சபரிமலை தரிசனத்துக்குச் செல்ல ஹெலிகாப்டரில் புறப்பட்டார். முதலில் நிலக்கல் பகுதியில் தரையிறங்கும் திட்டம் இருந்தது. ஆனால், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையால் திட்டம் மாற்றப்பட்டு, பத்தனம்திட்டா அருகே உள்ள பிரமதம் பகுதியில் புதிய ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
காலை 9.05 மணியளவில் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே, அதன் டயர்கள் புதிதாக போடப்பட்ட கான்கிரீட்டில் சிக்கிக் கொண்டன. இதனால் ஹெலிகாப்டர் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், குடியரசுத் தலைவர் முர்மு எந்த தாமதமுமின்றி சாலை வழியாக பம்பைக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, “ஹெலிகாப்டர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ஹெலிபேட் பணிகள் முடிக்கப்பட்டதால், கான்கிரீட் இன்னும் முழுமையாக உலராத நிலையில் இருந்தது. அதுவே சிக்கலுக்குக் காரணமாக இருந்தது,” என்றனர்.
பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இணைந்து ஹெலிகாப்டரை வெற்றிகரமாக மீட்டனர். பம்பை சென்ற குடியரசுத் தலைவர் முர்மு அங்குள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, அதன் பின் தேவசம் போர்டு ஏற்பாடு செய்த வாகனத்தில் சபரிமலை கோயிலுக்கு சென்றார்.