கொரோனா பெருந்தொற்றின்போது சேவையாற்றிய மருத்துவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றியைத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த மருத்துவர்கள் ஆற்றிய பங்கு அளவிட முடியாதது எனக் குறிப்பிட்டார்.
உரையில் அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் நாட்டின் சுகாதார நிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார். தூய்மை, சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை கொரோனா போன்ற பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள உதவியதாகவும் அவர் கூறினார்.
தனது அனுபவத்தை பகிர்ந்த அமித்ஷா, தான் மூன்று முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும் எந்த ஒரு மருத்துவரும் சிகிச்சை அளிக்க மறுக்கவில்லை என்றும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். கடினமான சூழலிலும் மருத்துவர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டது நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டியதாக அவர் கூறினார்.
மேலும், பிட் இந்தியா திட்டம் குறித்து பேசிய அவர், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை மக்கள் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளதாகக் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே எதிர்கால நோய்களைத் தடுக்கும் சிறந்த வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தோர் கலந்து கொண்டனர். மாநாடு மருத்துவத் துறையின் வளர்ச்சி, எதிர்கால சவால்கள் மற்றும் பொது சுகாதார மேம்பாடு குறித்து விவாதிக்கும் மேடையாக அமைந்தது.