யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் பரிசு – அகில இந்திய கால்பந்து சங்கம் அறிவிப்பு
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் சமீபத்தில் நடைபெற்ற யு-17 ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தகுதிச் சுற்றில், இந்திய அணி சிறப்பாக விளையாடி அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
‘ஜி’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளை தலா 2-1 கோல் கணக்கில் வீழ்த்தி, மொத்தம் 6 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. இதன் மூலம் இந்தியா, ஆசிய யு-17 மகளிர் கோப்பைக்கு தகுதி பெறும் சாதனையை முதன்முறையாக தகுதிச் சுற்று வாயிலாக நிகழ்த்தியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்திய அணி நேரடியாக பங்கேற்றிருந்தது. ஆனால், அந்த வேளையில் தகுதிச் சுற்று நடைமுறையில் இல்லை.
இந்த சிறப்புச் சாதனையை முன்னிட்டு, இந்திய யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அகில இந்திய கால்பந்து சங்கம் (AIFF) அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிறகு, இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.