அமெரிக்காவில் ஊழியர்களுக்கு ரூ.2,155 கோடி போனஸ் வழங்கிய தொழிலதிபர் – பாராட்டைப் பெற்ற மனிதநேய செயல்
அமெரிக்காவில் தனது நிறுவனத்தை விற்ற பின்னர், அதில் கிடைத்த வருமானத்தில் இருந்து ரூ.2,155 கோடி அளவிலான தொகையை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கிய தொழிலதிபரின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிரஹாம் வாக்கர், தனது குடும்பத்திற்கு சொந்தமான ‘ஃபைபர்பாண்ட்’ என்ற நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்த நிறுவனம் அமெரிக்காவின் பல பகுதிகளில் சேவைகளை வழங்கி வந்தது.
சில காரணங்களால் அந்த நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்த கிரஹாம் வாக்கர், விற்பனையில் கிடைத்த பெரும் தொகையை தனக்கே வைத்துக் கொள்ளாமல், ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்தார்.
அதன்படி, நிறுவன விற்பனைத் தொகையில் இருந்து 15 சதவீதத்தை ஊழியர்களுக்குப் போனஸாக வழங்கினார். இதன் மூலம் சுமார் ரூ.2,155 கோடி மதிப்பிலான தொகை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடினமான காலங்களிலும் நிறுவனத்திற்கு துணையாக நின்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.