ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் – 15 ஆண்டு சிறை, ரூ.29,000 கோடி அபராதம்
மலேசியாவில் பெரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 29 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் மலேசிய பிரதமராக பதவி வகித்த நஜீப் ரசாக், அந்த காலகட்டத்தில் செயல்பட்ட மலேசியா மேம்பாட்டு நிதி (1MDB) மூலம் பெருமளவில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். குறிப்பாக, சுமார் 75 கோடி ரூபாய் அளவிலான தொகையை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு முன்பே, இதே ஊழல் தொடர்பான ஒரு வழக்கில் நஜீப் ரசாக்கிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி தொடர்பான கூடுதல் குற்றச்சாட்டுகளை விசாரித்த கோலாலம்பூர் நீதிமன்றம், அவர் குற்றவாளி எனத் தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து, நஜீப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், 29 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.