‘பராசக்தி’ பட கதை நகல் புகார் – இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விளக்கம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ள நிலையில், படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ‘செம்மொழி’ என்ற தனது கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், கதை திருட்டு நடந்துள்ளதாகக் கூறி, திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியுள்ளார்.
மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, தனது ‘செம்மொழி’ கதையை 2010ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், அந்தக் கதையை பல தயாரிப்பாளர்களிடம் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதில் தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், அந்தக் கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதமே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இரு கதைகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளதா இல்லையா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறினார். இதனையடுத்து, ‘பராசக்தி’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
அத்துடன், மனுதாரரின் புகாரை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.