செய்கூலி, சேதாரம் கிடையாது என்ற அறிவிப்பு – சேலத்தில் நகைக்கடையில் மக்கள் கூட்டம்
தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சேலத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஓமலூர் சாலையில் இயங்கி வரும் அந்த நகைக்கடையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சமீப நாட்களாக விற்பனை மந்தமாக இருந்தது. இதனை மாற்றும் வகையில், வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்பு சலுகையை நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, காலை 5 மணி முதல் 10 மணி வரை தங்க நகைகள் வாங்குபவர்களுக்கும், முன்பதிவு செய்பவர்களுக்கும் எந்தவித செய்கூலியும், சேதாரமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்தவுடன், நேற்றைய மாலை முதலே பொதுமக்கள் நகைக்கடைக்கு வரத் தொடங்கினர். கடையில் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு காரணமாக கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதற்கிடையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வாகனங்களை கடை முன்புறம் நிறுத்தியதால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.