பெய்ஜிங்கின் மறைமுக சதி : சீனாவின் திட்டங்களை வெளிச்சம் போட்ட பெண்டகன் அறிக்கை
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தைவானை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவதை அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சீனா வகுத்துள்ள அந்தத் திட்டங்கள் என்ன? பெண்டகன் அறிக்கை எதைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தன் வசம் எனக் கூறி வரும் சீனா, கடந்த பல ஆண்டுகளாக கிழக்கு லடாக்கில் இந்தியாவுடன் மோதல் நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் பதற்றத்தை ஓரளவு குறைத்திருந்தாலும், அருணாச்சலப் பிரதேசத்தை ஒரு நிரந்தர சர்ச்சைப் பகுதியாக வைத்திருக்கவே பெய்ஜிங் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள பெண்டகன் அறிக்கை சீனாவின் உள்நோக்கங்களை தெளிவாக வெளிச்சமிட்டுள்ளது. Beijing’s Sinister Plan என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில், சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை உலகளவில் விரிவுபடுத்த முயன்று வருவதாகவும், எதிர்காலப் போர்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் திறன் கொண்ட, உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதே அதன் முக்கிய இலக்காக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா உரிமை கோரி வருவதையும், அந்தப் பகுதியை தைவானுக்கு இணையான முக்கிய நலனாகக் கருதுவதாகவும் பெண்டகன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், 2049 ஆம் ஆண்டுக்குள் அருணாச்சலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடல் ஆகிய பகுதிகளில் சீனாவின் நில மற்றும் கடல்சார் உரிமைகளை உறுதிப்படுத்துவதே பெய்ஜிங்கின் நீண்டகால திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா தோங்டாக், லண்டனில் இருந்து சீனா வழியாக ஜப்பான் செல்ல முயன்றபோது, ஷாங்காய் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த இடமாக அருணாச்சலப் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்ததால், அதனை செல்லாது என அறிவித்த சீன அதிகாரிகள், சீன பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டு பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியதாக தோங்டாக் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட யூடியூபர் ஒருவர் சீனாவில் கைது செய்யப்பட்டார். அந்த வீடியோ, தோங்டாக்கிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை தனது சொந்த நிலமாகக் கருதி, அந்தப் பகுதியை “தெற்கு திபெத்” அல்லது “சாங்னான்” என அழைக்கிறது.
1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட மெக்மோகன் கோட்டை பெய்ஜிங் இன்றளவும் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த கோடு, அப்போது பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் சுதந்திரமாக இருந்த திபெத்திற்கும் இடையிலான எல்லையை வரையறுத்தது. தொடக்கத்தில் தவாங் பகுதியை மட்டுமே உரிமை கோரிய சீனா, காலப்போக்கில் அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் எனக் கூறத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா மீது அழுத்தம் ஏற்படுத்தும் நோக்கில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு புதிய சீனப் பெயர்களைச் சூட்டிய பட்டியல்களை சீனா மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறது.
இதற்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் திட்டங்களை அமெரிக்கா தெளிவாக புரிந்துகொண்டிருப்பதை இந்த பெண்டகன் அறிக்கை காட்டுவதாக இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரி மகேஷ் சச்தேவ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அருணாச்சல விவகாரத்தை முன்வைத்து சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்ட முயல்கிறது என்ற பார்வையையும் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.