17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டில் கால்தடம் வைத்த தாரிக் ரஹ்மான் – இந்திய உறவுகளில் மாற்றம் ஏற்படுமா?
வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராக விளங்கும் தாரிக் ரஹ்மான், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு லண்டனிலிருந்து தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவர் தொண்டர்களிடையே நிகழ்த்திய உரை, வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது. அவரது வருகை எந்த வகையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டு வரும் தாரிக் ரஹ்மான், கடந்த 17 ஆண்டுகளாக இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் வங்கதேசம் திரும்பியுள்ளார். வரவிருக்கும் ஆண்டு நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் அவர் முக்கியமான அரசியல் பாத்திரமாக உருவெடுப்பார் எனக் கூறப்படும் சூழலில், அவரது வருகை நாட்டின் அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
தாரிக் ரஹ்மான், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஜியாவுர் ரஹ்மானின் மகன் ஆவார். 1981 ஆம் ஆண்டு ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது மனைவி கலீதா ஜியா தீவிர அரசியலில் களமிறங்கினார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டின் தேர்தலிலும் அவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.
இந்தச் சூழலில், 2007 ஆம் ஆண்டு ராணுவத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு வங்கதேசத்தில் அதிகாரம் பெற்றது. அப்போது கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சுமார் 18 மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார். 2008 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற அவர், உடனடியாக குடும்பத்துடன் லண்டன் சென்று குடியேறினார். அதன் பிறகு, 17 ஆண்டுகள் காலமாக அவர் ஒருமுறைகூட வங்கதேசம் திரும்பவில்லை.
இந்நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, கலீதா ஜியா மற்றும் தாரிக் ரஹ்மான் மீது நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக, லண்டனிலிருந்து தாரிக் ரஹ்மான் தற்போது வங்கதேசம் வந்தடைந்தார். தலைநகர் டாக்காவில் விமான நிலையத்தில் காலணிகளை அகற்றி, வெறுங்காலில் நின்று தாய்நாட்டை வணங்கிய அவர், மண்ணை கையில் எடுத்துக்கொண்டு நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தினார்.
அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், ஆடம்பரமான இருக்கைகளைத் தவிர்த்து, எளிய பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. தாரிக் ரஹ்மானின் இந்த எளிமையான அணுகுமுறை, அவரது கட்சி தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற “I Have a Dream” உரையை மேற்கோளாகக் கொண்டு பேசினார்.
தனக்கு ஒரு கனவு இருப்பதாகவும், அந்தக் கனவு வங்கதேசத்தை மக்கள் பாதுகாப்பாக வாழும் ஒரு தேசமாக மாற்றுவதாகும் எனவும் அவர் தெரிவித்தார். வங்கதேசம் என்பது இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் இணைந்து வாழும் நாடு என்றும், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய காலம் இது என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திபு சந்திர தாஸ் மற்றும் அம்ரித் மொண்டல் எனும் இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 342 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ள புள்ளி விவரங்களை அவர் குறிப்பிட்டார். இது குறித்து பேசும் போது, எந்த வயதினராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் நாடாக வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது இலக்கை அவர் வெளிப்படுத்தினார்.
அத்துடன், வங்கதேசத்தின் வெளிநாட்டு கொள்கைகள் குறித்தும் தாரிக் ரஹ்மான் விமர்சனம் முன்வைத்தார். முகமது யூனுஸ் தலைமையிலான அரசு இந்தியாவுடன் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கத்தை வளர்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “நமக்கு முதன்மை வங்கதேசமே; டெல்லியும் அல்ல, பாகிஸ்தானும் அல்ல” என அவர் தெளிவாகக் கூறினார். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
வங்கதேச தேசியவாத கட்சி தொடங்கிய நாளிலிருந்து இந்தியாவுடன் நல்லுறவை பேணி வந்ததாகவும் அவர் நினைவூட்டினார். பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்திற்கு சென்றிருந்த போது, கலீதா ஜியாவை நேரில் சந்தித்து பேசியதையும் அவர் குறிப்பிட்டார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கலீதா ஜியா விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பொறுப்பேற்கும் சூழல் உருவானால், இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவுகள் மேலும் சீராகவும் வலுவாகவும் மாறும் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.