பாகிஸ்தானின் வாதத்தை நொறுக்கிய இந்திய மாணவர் – ஆக்ஸ்போர்டு யூனியனில் அதிர வைத்த குரல்!
லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியனில் நடைபெற்ற பரபரப்பான விவாதத்தில், பாகிஸ்தானின் வாதங்களை முற்றாக உடைத்து, இந்தியாவின் உறுதியையும் தேசிய நிலைப்பாட்டையும் உலக அரங்கில் உரக்கப் பதிவு செய்துள்ளார் ஒரு இந்திய சட்ட மாணவர். அந்த மாணவர் யார்? விவாத மேடையில் என்ன நடந்தது? பார்ப்போம்.
ஆக்ஸ்போர்டு யூனியனில்,
“பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கொள்கை பாதுகாப்புக்கானதல்ல; அது மக்கள் ஆதரவை திரட்டும் அரசியல் உத்தி”
என்ற தலைப்பில் அனல் பறக்கும் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தை ஒருங்கிணைத்தவர், ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவர் மற்றும் பாகிஸ்தான் அமைச்சரின் மகனான மூசா ஹராஜ்.
இந்த விவாதத்தில் இந்தியாவின் சார்பில் வழக்கறிஞர் ஜே. சாய் தீபக் மற்றும் எம்.பி. பிரியங்கா சதுர்வேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ் காரணமாக அவர்கள் பங்கேற்க முடியவில்லை. இதைச் சாதகமாக்க முயன்ற மூசா ஹராஜ், இந்தியா விவாதத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாகக் காட்ட முயன்றதுடன், பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் முயற்சி செய்தார்.
இந்த முயற்சியைச் சுக்குநூறாக்கி, மேடையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர், மும்பையைச் சேர்ந்த இந்திய சட்ட மாணவர் வீரான்ஷ் பானுசாலி. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் இவர், விவாதத்தில் கலந்து கொண்டு பாகிஸ்தானின் வாதங்களை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்தார்.
பாகிஸ்தான் தன்னை “பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு” என சித்தரிக்க முயன்றபோது,
“எனக்கு அலங்காரமான வார்த்தைகள் தேவையில்லை; ஒரு காலண்டர் போதும்”
என்று கூறி, வரலாற்றை முன்வைத்து பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்தெறிந்தார் வீரான்ஷ்.
“லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலால் மூன்று இரவுகள் மும்பை உறங்கவில்லை. நானும் உறங்கவில்லை”
என்று உருக்கமாகப் பேசிய அவர்,
மும்பை தீக்கிரையாகிய போது, தொலைக்காட்சியில் தன் தாயின் நடுங்கும் குரலையும், தந்தையின் முகத்தில் இருந்த பதற்றத்தையும் பார்த்த சிறுவன் தான் என நினைவுகளை பகிர்ந்தார்.
1993 மும்பை குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டிய வீரான்ஷ்,
“அப்போது இந்தியாவில் தேர்தல் நடந்ததா?”
என்று கேள்வி எழுப்பினார்.
அது ஓட்டுக்காக செய்யப்பட்ட செயல் அல்ல;
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க,
தாவூத் இப்ராஹிம் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI திட்டமிட்டு நடத்திய போர் எனக் கூறினார்.
1993 மார்ச் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், 257 பேர் உயிரிழந்ததை நினைவூட்டிய அவர்,
26/11 தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய அரசு எடுத்த “பொறுமை அரசியல்” அமைதியைத் தரவில்லை என்றும்,
மாறாக பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களையே இந்தியா சந்திக்க நேரிட்டது என்றும் வலியுறுத்தினார்.
தற்போதைய சூழலில்,
“ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நாங்கள் படையெடுக்கவில்லை, ஆக்கிரமிக்கவில்லை”
என்று தெளிவாகப் பதிவு செய்தார்.
மேலும்,
“தன் மக்களுக்கு ரொட்டி தர முடியாத பாகிஸ்தான் அரசு, வறுமையை மறைக்க போர் பிம்பத்தை உருவாக்குகிறது”
என்று கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,
2008 ஆம் ஆண்டு மும்பை 26/11 தாக்குதலின்போது வீரான்ஷுக்கு வயது வெறும் இரண்டு.
அப்போது பெற்றோருடன் ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியிருந்த அவர்,
பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டபோது,
நூலிழையில் உயிர் தப்பியவர்களில் ஒருவர்.
விவாதத்தின் முடிவில் அவர் கூறிய இந்த வரிகள், உலக அரங்கில் இந்தியாவின் குரலாக ஒலித்தன:
“இந்தியா போரை விரும்பவில்லை.
வெங்காயமும் மின்சாரமும் வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண அண்டை நாடாகவே இருக்க விரும்புகிறது.
ஆனால் பயங்கரவாதம் நிறுத்தப்பட்டால் மட்டுமே அது சாத்தியம்.”
இந்த ஒரே உரை, ஆக்ஸ்போர்டு யூனியன் மேடையில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்தியாவின் உறுதியான குரலாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.