நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம்
பிரபல இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது.
தற்போது நயன்தாரா நடித்துவரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சுந்தர்.சி. அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன், விஷால் நடிக்கும் தனது அடுத்த படத்தை இயக்கத் தொடங்குகிறார்.
‘மதகஜராஜா’ திரைப்படத்தின் பின்னர், இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைகிறது. இதில் விஷாலுடன் தமன்னா மற்றும் கயாடு லோஹர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே படமாக்கப்பட்டு, தற்போது அதன் வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பரில் தொடங்கும் படப்பிடிப்பிற்கு முன், அந்த ப்ரோமோவை ரசிகர்களுக்கு வெளியிடத் தயாராகிறது படக்குழு.
இத்திரைப்படம் ஒரே கட்டமாக முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
விஷால் படத்தை முடித்தவுடன், சுந்தர்.சி ரஜினிகாந்த் நடிக்கும் தனது அடுத்த படத்துக்கான தயாரிப்புகளையும் தொடங்கவுள்ளார். அந்தத் திட்டத்திற்கான கதை விவாதங்கள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.