ஐ.நா. ஆயுதத் தடையை மீறிய சர்ச்சை – லிபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் பாகிஸ்தான்
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவின் கிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள லிபிய தேசிய இராணுவத்துடன், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள ஆயுதத் தடையை புறக்கணித்தே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதன் பின்னணியை விளக்கும் செய்தித் தொகுப்பு இது.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில், முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், அரசியல் நிலைமை பெரிதும் சீர்குலைந்தது. 2011ஆம் ஆண்டு, மதச்சார்பற்ற ஆட்சியை அகற்ற இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்தன. அதன்பின்னர், இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கும் மதச்சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
22 அரபு நாடுகளின் மொத்த செல்வ வளங்களில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ள லிபியாவில் பெரும் எண்ணெய் களஞ்சியங்கள் உள்ளன. குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு தற்போது அரசியல் ரீதியாக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. திரிப்போலியை தலைமையிடமாகக் கொண்டு GNA எனப்படும் தேசிய ஒற்றுமை அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் ஃபயீஸ் அல்-சர்ராஜ் தலைமையிலான இந்த அரசுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், துருக்கி, கத்தார் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
மற்றொரு புறம், கிழக்கு லிபியாவை ஜெனரல் கலீஃபா ஹஃப்தார் தலைமையிலான LNA எனப்படும் லிபிய தேசிய இராணுவம் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அணியை ரஷ்யா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் ஆதரிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையால் சட்டபூர்வ அரசாக GNA அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அதன் அதிகாரம் மிகக் குறைந்த நிலப்பரப்புக்குள் மட்டுமே உள்ளது.
இந்த சூழலில், நாட்டை முறையற்ற ஆட்சியாளர்களிடமிருந்து விடுவித்து, திரிப்போலி மற்றும் டோப்ருக் பகுதிகளை கைப்பற்றி ஒருங்கிணைந்த லிபியாவை உருவாக்கும் நோக்கில், திரிப்போலியை நோக்கி முன்னேற தனது படைகளுக்கு ஜெனரல் கலீஃபா ஹஃப்தார் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய பதற்றமான சூழ்நிலையில்தான், லிபிய தேசிய இராணுவத்துக்கு 16 JF-17 வகை பல்துறை போர் விமானங்கள் மற்றும் அடிப்படை விமானி பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் 12 ‘சூப்பர் முஷாக்’ பயிற்சி விமானங்கள் உள்ளிட்ட, மொத்தம் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லிபிய தேசிய இராணுவத்தின் துணைத் தளபதி சதாம் கலீஃபா ஹஃப்தாருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் நேரடி மேற்பார்வையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தமாக கருதப்படுகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் பாகிஸ்தான், உலகின் பிற நாடுகளுக்கு ஆயுத விற்பனையை விரிவுபடுத்தி தனது ராணுவ வலிமையை வெளிப்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
லிபியா மீது ஐ.நா. சபை நீண்ட காலமாக விதித்துள்ள ஆயுதத் தடையை இந்த ஒப்பந்தம் நேரடியாக மீறுவதால், அதற்கான விலக்கு பெற பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ளதா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், லிபிய தேசிய இராணுவம் அரசு சாரா ஆயுத அமைப்பாக கருதப்படுவதால், அதற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது சர்வதேச அரசியல் அரங்கில் பாகிஸ்தானுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.