கர்நாடகாவில் பேருந்து–லாரி மோதல்: 17 பேர் உயிரிழப்பு – தீப்பற்றிய பேருந்து, பெரும் சோகம்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே, தனியார் சொகுசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து, அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதி விபத்தில், பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து சிதறியதால், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திலேயே 10 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
பேருந்தில் பயணித்த 32 பேரில், சுமார் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை படிப்படியாக 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனுடன், கர்நாடக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.