திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்போரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி விழா இன்று (புதன்கிழமை) காலை சிறப்பாக ஆரம்பமானது. காலை 5 மணிக்கு அரோகரா முழக்கத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதன் மூலம் கந்த சஷ்டி திருவிழாவுக்கு தொடக்கம் வைக்கப்பட்டது.
பின்னர் காலை பல்லக்கு உற்சவமும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா வந்தார். விழா நாட்களில் தினமும் வேறு வேறு வாகனங்களில் முருகப் பெருமான் வீதி உலாவும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதன்படி,
- அக்டோபர் 23 (வியாழக்கிழமை) — ஆட்டுக்கிடா வாகனம்,
- அக்டோபர் 24 (வெள்ளிக்கிழமை) — புருஷா மிருக வாகனம்,
- அக்டோபர் 25 (சனிக்கிழமை) — பூத வாகனம்,
- அக்டோபர் 26 (ஞாயிற்றுக்கிழமை) — வெள்ளி அன்ன வாகனம் ஆகிய வாகனங்களில் தினமும் மேளதாளம், வானவேடிக்கை, சூரபொம்மை அலங்காரம் என உற்சாகமாக வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 27 (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தங்கவேலை ஏந்தி சூரபத்மனை வதம் செய்வார். பின்னர் இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும்.
அடுத்து அக்டோபர் 28 (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு திருமண கோலத்தில் முருகப்பெருமான் யானை வாகனத்தில் வீதி உலா வருவார்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் (தக்கார்) கார்த்திகேயன் மற்றும் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் சிறப்பாக செய்துள்ளனர்.