ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியாக, பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.
கடந்த 20ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம் மிகுந்த விமரிசையுடன் தொடங்கப்பட்டது. இந்த உற்சவத்தின் போது தினமும் நம்பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 5ஆம் நாள் நிகழ்வில் நம்பெருமாள் சௌரி கொண்டை சாற்றியும், தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் சிறப்பு தோற்றத்தில் எழுந்தருளினார்.
அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.