சபரிமலை பதினெட்டாம் படியில் சேதமும் கொள்ளையும் – பாஜக தலைவர் கடும் குற்றச்சாட்டு
சபரிமலையில் உள்ள புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டு, அங்கிருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அமைந்துள்ள துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், சபரிமலையிலிருந்து சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட நான்கு பஞ்சலோக சிலைகள், சர்வதேச குற்றவியல் வலையமைப்பின் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் வெறும் நான்கரை கிலோ தங்கம் திருடப்பட்டதுடன் முடிவடையவில்லை என்றும், 2015 ஆம் ஆண்டிலேயே புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் நிகழ்ந்த இந்த முறைகேடுகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம் என வேதனை தெரிவித்துள்ள ராஜீவ் சந்திரசேகர், இந்த வழக்கில் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை பாஜக உறுதியாக நிலைநாட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.