பிரதமர் மோடியின் தலைமையும் வழிகாட்டுதலுமுடன் 2026 சட்டமன்றப் போராட்டத்தை நம்பிக்கையுடன் சந்திப்போம்
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு, 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முழு தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜுன் ராம் மேக்வால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக்குப் பின்னர், பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை நீண்ட கால அரசியல் நண்பர் என குறிப்பிட்டார். மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு தமிழக மக்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் அரசை அமைப்பதே இலக்கு என்றும், அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும், ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்ட திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்துவோம் என்றும் மத்திய அமைச்சர் உறுதியுடன் தெரிவித்தார்.