பட்டா விவர திருத்தம் கோரி தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதியர்!
கோவை மாவட்டத்தில், பட்டா எண்ணில் ஏற்பட்ட தவறைச் சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, வயதான தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த வெங்கடாசலம் மற்றும் நாகமணி ஆகிய தம்பதியர், எதிர்பாராத விதமாக தங்கள்மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
இதைக் கவனித்த அங்கிருந்த காவல் துறையினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டு, பாதுகாப்பாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெங்கடாசலத்திற்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் தவறான பதிவு இருப்பதாகவும், அதனைத் திருத்தக் கோரியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் தங்களுடைய நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாகக் கூறி, அந்த தம்பதியர் மிகுந்த மனவேதனையை வெளிப்படுத்தினர்.