டிட்வா புயலுக்குப் பின்னர் இலங்கைக்கு இந்தியா உதவியது இயல்பான நடவடிக்கை – ஜெய்சங்கர்
டிட்வா புயலால் ஏற்பட்ட கடுமையான சேதங்களைச் சமாளிக்கும் வகையில், இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவித் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக இலங்கை சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, இந்திய அரசு சார்பில் “ஆபரேஷன் சாகர் பந்து” என்ற மனிதாபிமான திட்டத்தின் கீழ், பல கட்டங்களாக நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகள் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மனிதாபிமான முயற்சியின் தொடர்ச்சியாகவே, தனது இலங்கை பயணம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரையின்போது பேசிய ஜெய்சங்கர், புயலுக்குப் பிறகு இலங்கைக்கு இந்தியா துணை நிற்பது இயல்பானதும் அண்டை நாட்டின் கடமையும்தான் எனக் கூறினார்.
மேலும், இந்திய ராணுவம் இலங்கையில் தற்காலிக மருத்துவமனையை அமைத்து, 8,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்டுள்ள 450 மில்லியன் டாலர் உதவித் தொகுப்பில்,
- 350 மில்லியன் டாலர் சலுகை கடனாகவும்,
- 150 மில்லியன் டாலர் மானியமாகவும் வழங்கப்படவுள்ளதாக அவர் விளக்கினார்.
இந்த நிதி உதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வீடமைப்பு, கல்வி, விவசாயம், பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரத் தயார்நிலை உள்ளிட்ட, புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட முக்கிய துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.