தாய்–மகள் அன்பில் வளர்ந்த காளை : ஜல்லிக்கட்டு அரங்கில் பாயத் தயாராகும் “சித்தன்”
ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு காளைகள் தீவிர பயிற்சியுடன் தயாராகி வருகின்றன. உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் பங்கேற்க ஒரு காளையை தாயும் மகளும் இணைந்து தயார் செய்து வரும் சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பு இதோ.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெறும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் பல மாதங்களாக சிறப்பு பராமரிப்புடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஒரு காளையை வளர்த்து பயிற்றுவிக்கும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டு வருவது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
பாலமேடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் – மஞ்சுளா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் அழகுபிரியாவும் அவரது தாய் மஞ்சுளாவும் ஜல்லிக்கட்டு மீது ஆழ்ந்த ஈர்ப்புடன், கடந்த ஏழு ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு, தங்களது குலதெய்வத்தின் பெயரில் “சீலைக்காரி அம்மன்” என்றும், அன்புடன் “சித்தன்” என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
ஒரு குழந்தையைப் பேணிப் பாதுகாப்பது போலவே, இந்தக் காளையையும் அவர்கள் அன்போடு வளர்த்து வருகின்றனர். “எங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததால், இந்த ஜல்லிக்கட்டு காளையே எங்களுக்கு வாரிசு போன்றது” என உணர்ச்சி கலந்த குரலில் அழகுபிரியா தெரிவிக்கிறார்.
மக்காச்சோளம், புண்ணாக்கு, பிஸ்கட், வாழைப்பழம், வைக்கோல், கடலைச் செடி உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு, சித்தன் காளை ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப் பாயத் தயாராகி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் களம் கண்டுள்ள இந்தக் காளை, எந்த வீரரிடமும் சிக்காமல் துள்ளி குதித்து வெற்றிகளைப் பெற்றதுடன், பல்வேறு பரிசுகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்த 30 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், அழகுபிரியா தனது தந்தையுடன் நேரில் வாடிவாசலுக்கு சென்று காளையை களமாட வைத்துள்ளார். சித்தன் காளை மட்டுமல்லாமல், மேலும் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளையும் அழகுபிரியா, அவரது தாய் மஞ்சுளா உள்ளிட்ட குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.
தற்போது, சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் வீரத்தை காண தாய்–மகள் மட்டுமின்றி, ஊர்மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.