ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிடிஓவாக ஆனந்த் வரதராஜன் நியமனம்!
உலகப் புகழ்பெற்ற காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) பொறுப்பிற்கு இந்திய வம்சத்தைச் சேர்ந்த ஆனந்த் வரதராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் கல்வி பயின்ற ஆனந்த் வரதராஜன், அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் மேலும் ஒரு முதுகலை பட்டத்தை முடித்துள்ளார்.
முன்னதாக அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அதற்கு முன்பு ஆரக்கிள் உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சேவை செய்துள்ளார்.
ஸ்டார்பக்ஸின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான டெப்ஹால் லெபெவ்ரே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு ஆனந்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 19ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ளார் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.