சட்டவிரோத குடியேற்றம்: அசாமில் 19 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்
அசாம் மாநிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக அசாமில் வசித்து வந்த வெளிநாட்டவர்கள், வங்கதேசத்துக்குச் செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி மற்றும் தெற்கு சல்மாரா–மன்கச்சார் வழித்தடங்கள் மூலம் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 19 வங்கதேச குடிமக்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாநிலத்தில் அனுமதியின்றி தங்கியிருப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதியளித்துள்ளார்.