சீனிவாச ராமானுஜர் ஏன் உலகப் புகழ் பெற்ற கணித மேதை?
கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்தநாள், இந்தியாவில் தேசிய கணித தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கணித உலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ஆனால், அவரது வாழ்க்கைப் பயணம் எளிதானதல்ல.
பள்ளிப் பருவத்தில் ராமானுஜர் ஒரு சராசரி மாணவராகவே கருதப்பட்டார். ஆங்கிலம், உயிரியல் உள்ளிட்ட பல பாடங்களில் அவர் தொடர்ந்து தோல்வியடைந்தார். உயர்கல்விக்காக எழுதப்பட்ட இண்டர்மீடியட் தேர்விலும் அவர் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக அவருக்கு கிடைத்திருந்த உதவித்தொகையும் ரத்து செய்யப்பட்டது.
பொதுவான பார்வையில் அவர் ஒரு திறமையற்ற மாணவர் என எண்ணப்பட்டாலும், கணிதத்தில் மட்டும் அவர் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தினார். கணிதத்தில் முழு மதிப்பெண் பெறுவது அவருக்கு வழக்கமான ஒன்றாக இருந்தது. தன்னைவிட வயதில் மூத்த மாணவர்களுக்கே கணிதம் கற்றுக் கொடுக்கும் அளவிற்கு அவரது அறிவு வளர்ந்திருந்தது.
1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் பிறந்த ராமானுஜருக்கு சிறுவயதிலிருந்தே எண்கள் தான் உலகமாக இருந்தன. 1904 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த பின் கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கணிதம் தவிர பிற பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், அவரால் அங்கு படிப்பைத் தொடர இயலவில்லை.
பின்னர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தாலும், அதே நிலை தொடர்ந்தது. இதனால் முறையான பட்டப்படிப்பை அவர் முடிக்க முடியாமல் போனது. இருப்பினும், வீட்டிலிருந்தபடியே கணித நூல்களை ஆழமாக ஆராயத் தொடங்கினார். முழுநேரமும் கணித சிந்தனைகளில் மூழ்கினார்.
வாழ்வாதாரத்திற்காக சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்த ராமானுஜர், அங்கும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கணித ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவரது அபூர்வமான கணித திறமை, இங்கிலாந்தில் புகழ்பெற்ற கணிதவியலாளர் ஜி.ஹெச். ஹார்டியின் கவனத்திற்கு வந்தது. உடனடியாக லண்டன் வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக கடல் தாண்டி செல்ல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கணிதத்தின் மீது கொண்ட அளவிலா காதல் அவரை லண்டன் செல்ல வைத்தது. அங்கு ஹார்டி, லிட்டில்வுட் போன்ற உலகப் புகழ் பெற்ற கணித அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
Mock Theta Functions, Partition Theory, Modular Forms போன்ற பல முக்கிய கணித கோட்பாடுகளை அவர் உருவாக்கினார். பல நூற்றாண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்த கணித பிரச்சினைகளுக்கு புதிய விளக்கங்களை அளித்தார். குறுகிய காலத்திலேயே, உலக கணித வரலாற்றில் தவிர்க்க முடியாத நபராக மாறினார்.
ராமானுஜர் நாமக்கல் நாமகிரி தாயாரை தனது குலதெய்வமாக வழிபட்டவர். தனது கனவுகளில் தாயார் கணித சூத்திரங்களுக்கான விடைகளை அளிப்பதாகவும், அதை விழித்தவுடன் குறித்துக் கொள்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். தனது அனைத்து கணித சாதனைகளுக்கும் தெய்வீக அருள் காரணம் என அவர் நம்பினார்.
அதே நேரத்தில், இங்கிலாந்தின் குளிர் காலநிலை, உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு திரும்பிய பின்னரும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் காரணமாக உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இறுதியில், 1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில், வெறும் 32 வயதில் அவர் காலமானார். ஆனால், அவர் மறைந்த பின்னரும் அவரது கணிதக் கோட்பாடுகள் உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இன்றைய பார்-கோடு தொழில்நுட்பம், ஏடிஎம் அட்டைகள், பங்குச் சந்தை கணித கணக்கீடுகள் உள்ளிட்ட பல துறைகளில் ராமானுஜரின் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவரது பிறந்தநாளை தேசிய கணித தினமாக அறிவித்து மத்திய அரசு பெருமை சேர்த்துள்ளது.
சீனிவாச ராமானுஜர் இன்று இந்தியாவின் கணித அடையாளமாக விளங்குகிறார்.
அவர் இந்தியாவின் பெருமை.
அவர் இந்தியாவின் அறிவுப் பொக்கிஷம்