அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

Date:

அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் புதிய சாந்தி மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா கொண்டு வந்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? விரிவாக பார்ப்போம்.

சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அணுசக்தி தொடர்பான சாந்தி மசோதா விளங்குகிறது. அணுசக்தி உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்ற காரணங்களால் மின்சார தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தற்போதைய மின்உற்பத்தி திறன் அந்த தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், அதிக அளவில் அணுஉலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிலக்கரி உள்ளிட்ட பாரம்பரிய எரிபொருட்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, அதிக அளவில் கார்பன் டைஆக்சைடு வெளியேறி சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், அணுஉலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது மாசுபாடு மிகக் குறைவாக இருப்பதால், அணுஆற்றல் தூய்மையான ஆற்றல் எனக் கருதப்படுகிறது.

1962ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி, இந்தியாவில் அணுஆற்றல் உற்பத்தி செய்யும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சட்டம் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுஆற்றல் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவின் அணுஆற்றல் உற்பத்தி அளவு வெறும் 8.8 ஜிகாவாட் மட்டுமே உள்ளது. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் எட்ட, தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும், 2010ஆம் ஆண்டு அணுஉலைகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டத்தில், அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை வழங்கிய நிறுவனங்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வெளிநாட்டு அணுஉலை தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், உலைகளை வழங்கவும் தயக்கம் காட்டி வந்தன.

இந்தச் சூழ்நிலையில், மேற்கண்ட இரு சட்டங்களிலும் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இனிமேல் மத்திய அரசுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களும் அணுஉலைகளை அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் அணுஆற்றல் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை தடை செய்யப்பட்டிருந்த அணுசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் 49 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீடு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, அணுஉலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உலை வழங்கிய நிறுவனங்களுக்குப் பதிலாக, அதனை இயக்கும் மற்றும் நிர்வகிக்கும் நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணுஉலைகளை வழங்க முன்வரும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், இந்தியாவில் அமைக்கப்படும் அனைத்து அணுஉலைகளும் கட்டாயமாக காப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், அணுஉலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிப்பட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய திருத்தங்களின் மூலம், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா 100 ஜிகாவாட் அணுஆற்றல் உற்பத்தி இலக்கை அடையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைனில் இந்திய போர் கைதி: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்ட குஜராத் மாணவரின் பின்னணி

உக்ரைனில் இந்திய போர் கைதி: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்ட குஜராத்...

ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா

ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா திருப்பத்தூரில் ஜம்பு மகரிஷி...

சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார்

சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார் திருவண்ணாமலை...

ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்

ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர் அரக்கோணம் அருகே,...